23 Nov 2026
ஆரோக்கியம்

தேர்வு நேரத்தில் மாதவிடாய் தாமதமாகிறதா? மன அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம்!

இளம் பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களை எளிமையாகப் புரிந்துகொள்வோம்!
பகிரவும் WhatsApp
தேர்வு நேரத்தில் மாதவிடாய் தாமதமாகிறதா? மன அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம்!
இளம் பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களை எளிமையாகப் புரிந்துகொள்வோம்!
அவள் அரண்
செய்தியாளர்
01 Nov 2026
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இளம் பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களை எளிமையாகப் புரிந்துகொள்வோம்!

தேர்வு நேரம் வந்துவிட்டாலே மாணவிகளுக்கு படிப்பைப் பற்றிய கவலை, அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, தூக்கமின்மை எனப் பலவிதமான அழுத்தங்கள் ஏற்படுகின்றன. இந்த நேரத்தில் சில மாணவிகளுக்கு மாதவிடாய் தாமதமாகலாம்.

“போன மாதம் சரியான நேரத்தில் வந்ததே... இந்த மாதம் ஏன் இன்னும் வரவில்லை?” என்ற கேள்வியும் கவலையும் பலருக்கும் ஏற்படலாம்.

குறிப்பாக, முதல் மாதவிடாய் தொடங்கிய ஆரம்ப ஆண்டுகளில் மாதவிடாய் சுழற்சி சீராக இல்லாமல் இருப்பது பொதுவான ஒன்றுதான். சிலருக்கு முன்கூட்டியே வரலாம். சிலருக்குத் தாமதமாகலாம். இன்னும் சிலருக்கு சில மாதங்கள் வராமல் இருக்கலாம்.

இதற்கும் மன அழுத்தத்திற்கும் தொடர்பு இருக்கிறதா?

ஆம். நமது மனமும் உடலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படும்போது, மாதவிடாயைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் செயல்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.

ஆனால், மாதவிடாய் தாமதமாவதற்கு மன அழுத்தம் மட்டுமே காரணமல்ல. PCOS எனப்படும் சினைப்பை சார்ந்த ஹார்மோன் கோளாறு, தைராய்டு பிரச்சினைகள் உள்ளிட்ட பிற மருத்துவக் காரணங்களாலும் மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருக்கலாம்.

இளம் வயதில் மாதவிடாய் ஏன் ஒழுங்கற்றதாக இருக்கிறது?

நமது உடலில் மாதவிடாய் சுழற்சி சீராக நடைபெற மூளை மற்றும் சினைப்பைகள் இணைந்து செயல்படுகின்றன.

இதில் மூன்று முக்கியப் பகுதிகள் பங்கு வகிக்கின்றன.

ஹைப்போதாலமஸ் (Hypothalamus): மூளையில் உள்ள இந்தப் பகுதி GnRH என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இது மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் செயல்முறையின் தொடக்கமாக அமைகிறது.

பிட்யூட்டரி சுரப்பி (Pituitary Gland): இது FSH மற்றும் LH என்ற ஹார்மோன்களை வெளியிடுகிறது. இவை சினைப்பைகளின் செயல்பாட்டிற்கு உதவுகின்றன.

சினைப்பைகள் (Ovaries): ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்து மாதவிடாய் சுழற்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

முதல் மாதவிடாய் தொடங்கிய ஆரம்ப இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த ஹார்மோன் செயல்பாடுகள் இன்னும் சீரடைந்து கொண்டிருக்கும். இதனால் ஒவ்வொரு மாதமும் முட்டை வெளியேறும் செயல்முறை ஒரே மாதிரியாக நடைபெறாமல் இருக்கலாம்.

இதன் காரணமாக மாதவிடாய் சில நேரங்களில் முன்கூட்டியோ, தாமதமாகவோ வரலாம்.

மாதவிடாய் தாமதமாக வேறு என்ன காரணங்கள் இருக்கலாம்?

மன அழுத்தத்தைத் தவிர, போதுமான சத்தான உணவு எடுத்துக்கொள்ளாதது, திடீரென உடல் எடை குறைவது, அதிகப்படியான உடற்பயிற்சி, தூக்கமின்மை போன்றவையும் மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்கலாம்.

அதேபோல் PCOS, தைராய்டு ஹார்மோன் குறைபாடு அல்லது அதிகரிப்பு, புரோலாக்டின் ஹார்மோன் அதிகரிப்பு போன்ற மருத்துவக் காரணங்களாலும் மாதவிடாய் தாமதமாகலாம். கர்ப்பம் ஏற்பட வாய்ப்புள்ளவர்களுக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எனவே, மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருக்கும்போது காரணத்தை அறியாமல் மன அழுத்தத்தை மட்டும் குறை கூறிவிடக் கூடாது.

தேர்வு நேரத்தில் மன அழுத்தம் மாதவிடாயை எப்படிப் பாதிக்கிறது?

“நன்றாகத் தேர்வு எழுதுவேனா?”

“மதிப்பெண் குறைந்துவிட்டால் என்ன செய்வது?”

“பெற்றோர் என்ன நினைப்பார்கள்?”

இப்படிப் பல கேள்விகள் தேர்வு நேரத்தில் மாணவிகளின் மனதில் எழலாம். தொடர்ந்து ஏற்படும் கவலை, பயம், தூக்கமின்மை ஆகியவை உடலில் மன அழுத்தம் தொடர்பான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

இந்த மாற்றங்கள் மாதவிடாயை எப்படிப் பாதிக்கின்றன என்பதை நான்கு படிகளில் புரிந்துகொள்வோம்.

படி 1: மன அழுத்தம் அதிகரிக்கிறது

தேர்வு குறித்த பயம், பதற்றம் மற்றும் அதிகப்படியான கவலை காரணமாக உடல் மன அழுத்தத்திற்கு எதிர்வினையாற்றத் தொடங்குகிறது.

படி 2: ஹார்மோன் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படலாம்

அதிக மன அழுத்தம் ஏற்படும்போது, மூளையிலிருந்து வெளியாகும் GnRH என்ற ஹார்மோனின் இயல்பான செயல்பாட்டில் மாற்றம் ஏற்படலாம்.

படி 3: முட்டை வெளியேறுவது தாமதமாகலாம்

GnRH ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்கள் FSH மற்றும் LH ஹார்மோன்களின் செயல்பாட்டையும் பாதிக்கலாம். இதனால் சினைப்பைகளிலிருந்து முட்டை வெளியேறுவது தாமதமாகலாம். சில நேரங்களில் தற்காலிகமாக முட்டை வெளியேறாமல் போகவும் வாய்ப்புள்ளது.

படி 4: மாதவிடாய் தாமதமாகலாம்

முட்டை வெளியேறும் செயல்முறை தாமதமானால், அடுத்த மாதவிடாயும் தாமதமாகலாம். நீண்டகாலமாக மன அழுத்தம் தொடரும்போது சிலருக்கு மாதவிடாய் தற்காலிகமாக நின்றுவிடவும் வாய்ப்புள்ளது.

மன அழுத்தம், போதிய ஊட்டச்சத்து இல்லாமை அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி போன்ற காரணங்களால் மூளையின் ஹார்மோன் செயல்பாடு பாதிக்கப்பட்டு மாதவிடாய் நின்றுவிடும் நிலையை, மற்ற மருத்துவக் காரணங்களை விலக்கிய பிறகு, Functional Hypothalamic Amenorrhea (FHA) என்று மருத்துவர்கள் கண்டறியலாம்.

இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், மன அழுத்தம் மாதவிடாய் இரத்தப்போக்கை நேரடியாக நிறுத்துகிறது என்பதல்ல. அது முட்டை வெளியேறும் செயல்முறையைப் பாதிப்பதன் மூலம் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

உடல்நலத்திலும் அக்கறை காட்டுவோம்!

மாதவிடாய் தாமதமானால் உடனே பயப்பட வேண்டியதில்லை. அதே நேரத்தில் அதை அலட்சியப்படுத்தவும் கூடாது. குறிப்பாக 90 நாட்களுக்கு மேல் மாதவிடாய் வராமல் இருந்தாலோ, தொடர்ந்து ஒழுங்கற்றதாக இருந்தாலோ மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

தேர்வு நேரத்தில் மாணவிகளுக்கு நல்ல உணவு, போதுமான தூக்கம், சிறிது ஓய்வு மற்றும் மன அமைதி மிகவும் அவசியம்.

பெற்றோர்களும் “எத்தனை மதிப்பெண் வாங்குவாய்?” என்று கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், “நன்றாகச் சாப்பிட்டாயா?”, “போதுமான நேரம் தூங்குகிறாயா?”, “ஏதாவது கவலையாக இருக்கிறதா?” என்றும் அன்புடன் கேட்க வேண்டும்.

ஏனெனில், மதிப்பெண்கள் முக்கியம்தான். ஆனால், அதைவிட நம் குழந்தைகளின் உடல்நலமும் மனநலமும் மிகவும் முக்கியம்!

தேர்வு மன அழுத்தம் மாதவிடாயைப் பாதிக்குமா?
தேர்வு நேரத்தில் சில மாணவிகளுக்கு மாதவிடாய் தாமதமாகலாம். ஆனால், எல்லோருக்கும் இப்படியொரு மாற்றம் ஏற்படுவதில்லை. ஒவ்வொருவரின் உடலும் மன அழுத்தத்தை வெவ்வேறு விதமாக எதிர்கொள்கிறது.

அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற அழுத்தம், தோல்வி குறித்த பயம், பெற்றோரின் எதிர்பார்ப்பு, தூக்கமின்மை, சரியான நேரத்தில் உணவு உண்ணாமை, அதிகப்படியான உடற்பயிற்சி போன்றவை உடலின் ஹார்மோன் செயல்பாட்டைப் பாதிக்கலாம். இயல்பான உடல் எடையுள்ள மாணவிகளுக்கும் இத்தகைய மாற்றங்கள் ஏற்படலாம்.

.

மாதவிடாய் தாமதமானால் எப்போது மருத்துவரைப் பார்க்க வேண்டும்?

மாதவிடாய் தொடங்கிய முதல் சில ஆண்டுகளில், சில நேரங்களில் சீக்கிரமாகவோ தாமதமாகவோ வரலாம். இதற்காக உடனே பயப்பட வேண்டியதில்லை. ஆனால், சில அறிகுறிகளைக் கவனிப்பது முக்கியம்.

  • மாதவிடாய் தொடர்ந்து 45 நாட்களுக்கு மேல் தாமதமாக வந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
  • ஒருமுறைகூட 90 நாட்கள் மாதவிடாய் வரவில்லை என்றால் கண்டிப்பாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
  • வழக்கத்தைவிட அதிகமாக இரத்தப்போக்கு, தாங்க முடியாத வயிற்றுவலி, திடீர் உடல் எடை மாற்றம் அல்லது அதிக சோர்வு இருந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும்.
  • ஒரு மணி நேரத்திற்குள் நாப்கின் முழுவதும் நனைவது தொடர்ந்து ஏற்பட்டாலோ, மயக்கம் வந்தாலோ உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.

மாதவிடாய் தாமதமாவதற்கு படிப்பு, தேர்வு குறித்த மன அழுத்தம் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், தைராய்டு மற்றும் பிற ஹார்மோன் மாற்றங்களாலும் இப்படியாகலாம்.

பெண்களே, உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள். அம்மாவிடமோ, நம்பிக்கையான பெரியவரிடமோ தயங்காமல் பேசுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரின் உதவியைப் பெறுங்கள்.

மாதவிடாய் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமல்ல; உங்கள் உடல்நலத்தின் முக்கியமான ஓர் அறிகுறி!

 

Dr R Vijayashanthini MD (HOM)

Sushaanth Homoeo Clinic

Madambakkam