ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. ஆனால், வளர்ச்சியில் ஏற்படும் தாமதத்தைக் கவனிப்பதில் நாம் தாமதிக்கக் கூடாது!
“இன்னும் கொஞ்சம் வயதாகட்டும்… பேசிவிடுவான்!”
“அவளுக்குத் தனியாக விளையாடத்தான் பிடிக்கும்!”
“போகப் போக எல்லாம் சரியாகிவிடும்!”
குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றிப் பேசும்போது பல வீடுகளில் நாம் கேட்கும் வார்த்தைகள் இவை.
ஒவ்வொரு குழந்தையும் ஒரே வேகத்தில் வளர்வதில்லை என்பது உண்மைதான். ஆனால், தொடர்ந்து காணப்படும் வளர்ச்சிச் சிரமங்களை அலட்சியப்படுத்தாமல் கவனிப்பது அவசியம்.
பெற்றோர்கள் எதைக் கவனிக்க வேண்டும்?
குழந்தையின் வளர்ச்சி என்பது நடப்பதும் பேசுவதும் மட்டுமல்ல. மற்றவர்களுடன் பழகுவது, தேவைகளை வெளிப்படுத்துவது, விளையாடுவது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது, அன்றாடச் செயல்களைத் தானாகச் செய்வது எனப் பல திறன்களை உள்ளடக்கியது.
வயதுக்கேற்ற பேச்சு வளர்ச்சியில் தாமதம், பிறர் பேசுவதைப் புரிந்துகொள்வதில் சிரமம், சமூகத் தொடர்பில் சிரமம், கற்றல் மற்றும் அன்றாடச் செயல்பாடுகளில் அதிக உதவி தேவைப்படுதல் போன்றவற்றைப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.
இவை அனைத்தும் ஒரு குறைபாட்டை உறுதிப்படுத்துவதில்லை. ஆனால், நிபுணர்களின் ஆலோசனை தேவைப்படலாம் என்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். ஏற்கெனவே கற்ற திறன்களை குழந்தை இழந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
குழந்தைக்கு என்ன உதவி தேவை?
“என் குழந்தைக்கு என்ன பிரச்சினை?” என்று கவலைப்படுவதைவிட, “என் குழந்தைக்கு என்ன உதவி தேவை?” என்று சிந்திப்பதே சிறந்த அணுகுமுறை.
குழந்தையின் தேவைக்கேற்ப பேச்சு மற்றும் மொழிப் பயிற்சி, தொழில்சார் சிகிச்சை, இயன்முறை சிகிச்சை, சிறப்புக் கல்வி போன்ற உதவிகள் வழங்கப்படலாம்.
பயிற்சி மையங்களில் கற்றுக்கொள்ளும் திறன்களை வீட்டிலும் பள்ளியிலும் பயன்படுத்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் துணைநிற்க வேண்டும்.
சிறிய முன்னேற்றமும் பெரிய மகிழ்ச்சிதான்!
முதன்முறையாகத் தனது தேவையை வெளிப்படுத்துவது, தானாக உணவு உண்பது, நண்பர்களுடன் விளையாட முயற்சிப்பது போன்ற ஒவ்வொரு முன்னேற்றமும் குழந்தைக்கும் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான தருணமே!
குழந்தையின் திறனை வளர்ப்போம்!
சென்னை கீழ்க்கட்டளையில் செயல்படும் குரு வித்யாஸ்ரம் சிறப்புப் பள்ளி (Guru Vidhyashram Special School) போன்ற கல்வி நிறுவனங்கள், சிறப்புக் கல்வியுடன் குழந்தைகளின் தனிப்பட்ட வளர்ச்சித் தேவைகளையும் சுயசார்புத் திறன்களையும் கவனத்தில் கொண்டு செயல்படுகின்றன.
குழந்தையை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். நேற்று இருந்ததைவிட இன்று என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறமை உண்டு. அதை வெளிக்கொண்டு வர அன்பும் பொறுமையும் சரியான வழிகாட்டுதலும் தேவை.
குழந்தையின் சிரமத்தை மட்டும் பார்க்காதீர்கள்… அதன் திறனையும் பாருங்கள்!
பயப்பட வேண்டாம். புறக்கணிக்கவும் வேண்டாம். புரிந்துகொண்டு துணைநிற்போம்!