24 Nov 2026
குழந்தைகள்

குழந்தையைப் பாராட்டக் கற்றுக்கொள்வோம்!

பகிரவும் WhatsApp
குழந்தையைப் பாராட்டக் கற்றுக்கொள்வோம்!
கவிப்ரியா ம
செய்தியாளர்
11 Oct 2026
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பெற்றோரின் கவனம், அங்கீகாரம் மற்றும் நேர்மறை வலுப்படுத்துதல் (Positive Reinforcement) ஆகியவற்றின் முக்கியத்துவம்

குழந்தை நன்றாக வளர வேண்டும்” என்பதே ஒவ்வொரு பெற்றோரின் விருப்பமாகும். அதற்காக குழந்தையின் கல்வி, உணவு, உடல்நலம், பாதுகாப்பு எனப் பல விஷயங்களில் பெற்றோர்கள் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் குழந்தையின் ஆரோக்கியமான மனவளர்ச்சிக்கு மிகவும் அவசியமான மற்றொரு விஷயம் உள்ளது

 

பெற்றோரின் அன்பான கவனமும், அங்கீகாரமும், நேர்மறையான அணுகுமுறையும்.

குழந்தை என்ன செய்கிறது என்பதைப் பார்ப்பது மட்டுமல்லாமல், அது ஏன் அப்படிச் செய்கிறது என்பதைப் புரிந்துகொள்வதும் நல்ல பெற்றோரின் முக்கியமான பண்பாகும்.

 

குழந்தைக்கு பெற்றோரின் கவனம் ஏன் அவசியம்?

குழந்தைக்கு பெற்றோரின் கவனம் என்பது வெறும் அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல. அது குழந்தையின் தன்னம்பிக்கை, பாதுகாப்பு உணர்வு, சமூகத் திறன் மற்றும் உணர்ச்சி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது.

குழந்தை பேசும்போது கவனமாகக் கேட்பது, அதன் கேள்விகளுக்கு பதிலளிப்பது, அதன் முயற்சிகளைப் பார்ப்பது, அதன் உணர்வுகளை மதிப்பது போன்ற சிறிய செயல்கள் குழந்தைக்கு ஒரு முக்கியமான செய்தியைத் தருகின்றன:

“நான் முக்கியமானவன்.”

“என் உணர்வுகளுக்கு மதிப்பு இருக்கிறது.”

“என் பெற்றோர் என்னைக் கவனிக்கிறார்கள்.”

இந்த உணர்வு குழந்தையின் மனதில் பாதுகாப்பையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.

பெற்றோர் குழந்தைக்கு நேரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக நாள் முழுவதும் குழந்தையுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. தினமும் சில நிமிடங்களாவது முழுமையான கவனத்துடன் குழந்தையுடன் இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அந்த நேரத்தில் கைபேசி, தொலைக்காட்சி போன்ற கவனச்சிதறல்களைத் தவிர்த்து, குழந்தையுடன் பேசுவது, விளையாடுவது அல்லது அது சொல்வதை அமைதியாகக் கேட்பது போதுமானதாக இருக்கலாம்.

 

 குழந்தையின் நல்ல நடத்தையை நாம் கவனிக்கிறோமா?

பல குடும்பங்களில் குழந்தை தவறு செய்யும் போது உடனடியாக கவனம் செலுத்தப்படுகிறது.

குழந்தை சத்தம் போட்டால் கவனிக்கிறோம்.

பொருட்களைச் சிதற விட்டால் கவனிக்கிறோம்.

படிக்காமல் இருந்தால் கவனிக்கிறோம்.

கேட்காமல் இருந்தால் கவனிக்கிறோம்.

 

ஆனால் குழந்தை அமைதியாகப் புத்தகம் படிக்கும் போது?

தன் பொருட்களை தானாக ஒழுங்குபடுத்தும் போது?

தம்பி, தங்கைக்கு உதவும்போது?

மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது?

கஷ்டமாக இருந்தாலும் மீண்டும் முயற்சி செய்யும் போது?

அந்த நல்ல நடத்தைகளை நாம் எவ்வளவு விரைவாகக் கவனிக்கிறோம்?

குழந்தையின் தவறுகளை மட்டும் கவனிக்கும் பெற்றோராக இல்லாமல், அதன் நல்ல நடத்தைகளையும் கவனிக்கும் பெற்றோராக நாம் மாற வேண்டும்.

 

நேர்மறை வலுப்படுத்துதல் என்றால் என்ன?

உளவியலில் நேர்மறை வலுப்படுத்துதல் (Positive Reinforcement) என்பது குழந்தையை விரும்பத்தக்க ஒரு நடத்தையைச் செய்த பிறகு, அதற்கு நேர்மறையான பதிலை வழங்குவதன் மூலம் இந்த நடத்தையை எதிர்காலத்திலும் தொடரச் செய்வதாகும்.

 

 உதாரணமாக, குழந்தை விளையாடிய பிறகு தனது பொம்மைகளைத் தானாக ஒழுங்குபடுத்துகிறது என்று வைத்துக்கொள்வோம்.

பெற்றோர்,

“நீ விளையாடிய பிறகு உன் பொம்மைகளை நீயே ஒழுங்காக வைத்திருக்கிறாய். மிகவும் பொறுப்பாக நடந்து கொண்டாய். பாராட்டுகள்!”

என்று கூறலாம்.

இதன் மூலம் குழந்தை எந்த நடத்தைக்குப் பாராட்டு கிடைத்தது என்பதை புரிந்து கொள்கிறது.

 

அடுத்த முறை அதே நல்ல நடத்தையை மீண்டும் செய்யும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

இதுவே நேர்மறை வலுப்படுத்துதலின் அடிப்படை.

 

பாராட்டு எப்படி இருக்க வேண்டும்?

குழந்தையைப் பாராட்டுவது மிகவும் நல்லது. ஆனால் எப்படிப் பாராட்டுகிறோம் என்பதும் முக்கியம்.

“நல்ல குழந்தை.”

“சூப்பர்.”

“மிகவும் நல்லது.”

என்று பொதுவாக பாராட்டுவதை காட்டிலும், குழந்தை செய்த குறிப்பிட்ட நல்ல செயலைச் சுட்டிக்காட்டிப் பாராட்டுவது சிறந்தது.

உதாரணம்:

“நீ உன் தம்பியுடன் பொம்மையைப் பகிர்ந்து கொண்டது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.”

“கணக்கு கடினமாக இருந்தாலும் நீ மீண்டும் முயற்சி செய்தாய். உன் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.”

“யாரும் சொல்லாமல் உன் புத்தகங்களை நீயே எடுத்து வைத்தாய். அது மிகவும் பொறுப்பான செயல்.”

இத்தகைய பாராட்டு குழந்தைக்கு, “நான் என்ன செய்தேன் என்பது என் பெற்றோருக்கு தெரியும்” என்ற உணர்வைத் தருகிறது.

 

(அடுத்த வாரம் தொடரும்...)